/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 சதவீதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
100 சதவீதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : பிப் 21, 2025 06:59 AM
கமுதி: கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு 100 சதவீதம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், மிளகாய், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வந்தனர். கிராமங்களில் போதிய பருவ மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. பயிர்கள் அறுவடை செய்யும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட தோப்படைப்பட்டி, ஓ.கரிசல்குளம், நெறிஞ்சிப்பட்டி, புத்துருத்தி, வல்லக்குளம், செங்கோட்டைபட்டி, சாத்துார் நாயக்கன்பட்டி, கூடக்குளம், போத்தநதி, தொட்டியாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சோளம், கரும்பு, நெல், மிளகாய் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
இதுகுறித்து விவசாயிகள் சார்பில் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில நேரில் ஆய்வு செய்தனர். கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காட்டுப்பன்றியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு சார்பில் 100 சதவீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.