/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதி கட்ட ஆய்வு நிறைவு: டிச.5 க்குள் திறக்க வாய்ப்பு
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதி கட்ட ஆய்வு நிறைவு: டிச.5 க்குள் திறக்க வாய்ப்பு
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதி கட்ட ஆய்வு நிறைவு: டிச.5 க்குள் திறக்க வாய்ப்பு
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதி கட்ட ஆய்வு நிறைவு: டிச.5 க்குள் திறக்க வாய்ப்பு
ADDED : நவ 15, 2024 02:36 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதிக் கட்ட ஆய்வு நிறைவடைந்ததால் டிச.5க்குள் அதனை திறக்க வாய்ப்பு உள்ளது.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியும், இதன் நடுவில் துாக்கு பாலம் பொருத்தி பல கட்டமாக திறந்து மூடும் சோதனையும், பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்தது.
இந்நிலையில் இறுதியாக நேற்று முன்தினம் பாம்பன் பாலத்தில் உள்ள துாண்கள், இரும்பு கர்டர்களை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி நேற்று துாக்கு பாலத்தை திறந்து மூடும் செயல்முறை, ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
அதன் பின் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 7 ஆய்வு ரயில் பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் இன்ஜின் 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் பாம்பன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சென்றடைந்தது.
பின் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட அதே ரயிலில் சவுத்ரி பயணித்து அதிவேகமாக செல்லும் போது பாலத்தில் ஏற்படும் அதிர்வுகள், பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கினார். இதையடுத்து புதிய பாம்பன் பாலத்தில் இறுதி கட்ட ஆய்வு முடிந்ததால் டிச.5 க்குள் பாலத்தை திறக்க வாய்ப்பு உள்ளது.
ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது :
புதிய பாலத்தில் இறுதிக் கட்ட ஆய்வு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் அறிக்கை ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். திறப்பு விழா குறித்து ரயில்வே அமைச்சகம் முடிவெடுக்கும். புதிய பாம்பன் பாலத்தில் ரயில்கள் 10 முதல் 15 நிமிடத்திற்குள் கடந்து செல்லக் கூடும். பழைய ரயில் பாலம் பலமிழந்துள்ளதால் அதனை பராமரித்து பாதுகாப்பது சிரமம். இருப்பினும் இப்போதைக்கு அதனை அகற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.