நகராட்சி குப்பைக் கிடங்கில் பரவிய தீயால் புகை மூட்டம்
நகராட்சி குப்பைக் கிடங்கில் பரவிய தீயால் புகை மூட்டம்
ADDED : ஜூன் 07, 2026 02:40 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி குப்பைக் கிடங்கில் பற்ற வைத்த தீயால் ஒரு கி.மீ., சுற்றளவிற்கு புகை பரவியதால் மூச்சுத் திணறலால் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டனர். தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதி யில் சக்கரகோட்டை, பட்டணம்காத்தான் குடி யிருப்புப் பகுதிகளை ஒட்டி நகராட்சி குப்பைக் கிடங்கு 15 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த கிடங்கில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 20 டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன.
நேற்று குப்பை கிடங்கில் தீ மளமளவென பரவியதால் குடியிருப்பு பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரு வாகனங்கள் குப்பைக் கிடங்கிற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை 4:00 மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணி இரவு வரை நீடித்தது. குப்பையை முறையாக தரம் பிரிக்காததால் நச்சுப்புகை பரவியது.
இதனால் தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டனர். நகராட்சி குப்பைக் கிடங்கில் மறு சுழற்சி இயந்திரத்தை பராமரித்து குப்பையை உரிய முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
