ADDED : ஜூன் 04, 2025 11:37 PM
தொண்டி: திருவாடானை, தொண்டியில் மீன் விலை உயர்வால் அசைவப் பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் நாட்டுப் படகுகளில் குறைந்த துாரத்திற்கு மட்டுமே சென்று மீன் பிடிக்க வேண்டும். இதனால் அதிகளவு மீன்கள் கிடைக்காது.
இந்த மீன்களும் கடலோரத்திலேயே வியாபாரிகளால் வாங்கப்பட்டு விடும். இந்நிலையில் திருவாடானை, தொண்டியில் கடல் மீன்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
பாறை மீன் ரூ.600க்கும், கலிங்கா முரல் ரூ.700க்கும், வெள மீன் ரூ.600க்கும், நண்டு ரூ.700க்கும், பச்சை முரல் ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வகையான மீன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.300 முதல் 400 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வால் விற்பனையாளர்களுக்கு பாதிப்பில்லை. தினக்கூலி வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசைவ பிரியர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் தடைகாலத்தில் மீன் விலை உயரும். அதுவே நிலையான விலையாக மாறிவிடும்.
இதனால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதிகாரிகள் தலையிட்டு மீன் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தடைகாலம் முடிந்தும் மீன்விலை குறையுமா என தெரியவில்லை என்றனர்.