/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கு மீன்வள அதிகாரிகள் எச்சரிக்கை
/
மீனவர்களுக்கு மீன்வள அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : ஜன 11, 2025 06:29 AM
தொண்டி: பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறையால் வரும் சுற்றுலாப் பயணிகளை மீனவர்கள் படகில் கடலுக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடற்கரைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருபவர்கள் மீன்பிடி படகுகளில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பயணிக்கின்றனர். மீன்பிடி படகுகளில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என தடை இருந்தும் காசுக்கு ஆசைப்படும் மீனவர்கள் கண்டு கொள்ளாமல் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
மேலும் 25 முதல் 30 பேரை ஏற்றிச் செல்லும் போது தண்ணீரை பார்த்த ஆர்வத்தில் பயணிகள் எழ முயற்சிக்கும் போது படகு ஆட்டம் காண்பதுடன் தடுமாறி கவிழ்ந்து விடுகிறது. இதுவே பெரும்பாலான படகு விபத்திற்கு காரணமாக அமைகிறது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு தேவிபட்டினத்தில் மீன்பிடி படகில் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் இறந்தனர். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், கடலோர காவல் அமலாக்கபிரிவு எஸ்.ஐ., குருநாதன் கூறியதாவது:
பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். அவர்களை மீனவர்கள் படகில் கடலுக்கு அழைத்து செல்லக்கூடாது. ராமநாதபுரம் ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை மீனவ கிராமங்களுக்கு சென்று இதற்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.
மீறி படகில் அழைத்துச்சென்றால் படகை பறிமுதல் செய்வதோடு, அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றனர்.