ADDED : ஆக 28, 2026 11:38 PM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறையின் ரோந்து படகு சேத மடைந்து கடற்கரையில் நிறுத்தப்பட்ட நிலையில் இன்ஜின் மாயமானது. இதனால் அரசுக்கு ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் 650 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இவர்கள் தடையை மீறி இரட்டை மடி, சுருக்கு மடியில் மீன் பிடிப்பதை தடுக்கவும், கடலோரத்தில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அவசர உதவி செய்வதற்காகவும் கஜா புயல் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தில் அதிநவீன ரோந்து படகு மீன்வளத்துறைக்கு 4 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது.
துவக்கத்தில் இப்படகில் ரோந்து பணியில் ஈடுபட்ட மீன்வளத்துறையினர் காலப்போக்கில் அதை கண்டு கொள்ளாமல் விட்டனர். இதனால் படகு இன்ஜின் பழுதானதால் கடற்கரையில் சேதமடைந்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிலிருந்த இன்ஜின், 8 சொகுசு இருக்கைகள், பைபர் பந்தல் உள்ளிட்ட தளவாட பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ரோந்து மற்றும் மீட்பு பணிக்காக வழங்கிய படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பராமரிக்காமல் கைவிட்டதால் அரசு நிதி ரூ.25 லட்சம் வீணானது.
இதுகுறித்து தமிழக அரசு விசாரித்து சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து ரோந்து படகை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
