/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன் பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படாததால் மீனவர்கள் தவிப்பு
/
மீன் பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படாததால் மீனவர்கள் தவிப்பு
மீன் பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படாததால் மீனவர்கள் தவிப்பு
மீன் பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படாததால் மீனவர்கள் தவிப்பு
ADDED : மே 10, 2025 02:11 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீன் பிடி தொழில் இல்லாமல் பாதிக்கப்படும் 1.90 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படாததால் தவிப்பில் உள்ளனர்.
வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக்., ஜலசந்தி நீரிணைப்பு ஆகிய பகுதிகளில் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக ஆண்டுதோறும் ஏப்., மே, ஜூன், ஆகிய மாதங்களை மத்திய மீன் வளத்துறை கண்டறிந்துள்ளது.
இதன்படி ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலுார், திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன் பிடி தொழிலுக்கு செல்லாமல் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் படகுகளின் பராமரிப்பு பணிகள் நடக்கும். மீனவர்கள் குடும்பம் தொழில் இல்லாமல் பாதிக்கப்படும் என்பதால் மீன் பிடி தடைக்காலத்தில் நிவாரணத்தொகையாக குடும்பத்திற்கு தலா ரூ.8000 வழங்கப்படும். இந்த தொகை தடைக்காலத்தின் போது வழங்கினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
தடைக்காலம் துவங்கி ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில் அரசு நிவாரணத்தொகை வழங்காததால் 1.90 லட்சம் மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இதில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.