/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் களவு போகும் பாலை மீன் குஞ்சுகள் அதிகாரிகள் தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
/
கடலில் களவு போகும் பாலை மீன் குஞ்சுகள் அதிகாரிகள் தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
கடலில் களவு போகும் பாலை மீன் குஞ்சுகள் அதிகாரிகள் தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
கடலில் களவு போகும் பாலை மீன் குஞ்சுகள் அதிகாரிகள் தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 22, 2025 05:46 AM
ராமநாதபுரம்: மீன்கள் இனப்பெருக்க காலத்தில் சிலர் சட்டவிரோதமாக பாலை மீன் குஞ்சுகளை பிடிப்பதை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக கடல் பகுதியில் மீன்வளத்தை பெருக்கும் நோக்கில் 60 நாட்கள் விசைப்படகில் மீன்பிடிக்க தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இனப்பெருக்க காலத்தில் கடற்கரையையொட்டிய ஆற்று முகத்துவாரத்தில் உற்பத்தியாகும் பல லட்சம் பாலை மீன் குஞ்சுகளை சிலர் சட்டத்திற்கு புறம்பாக பிடிக்கின்றனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மீன்வளத்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக மீனவர்கள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஏப்., மே மீன்களின் இனப்பெருக்க காலமாகும். 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
புரதச்சத்து மிகுந்த பாலை மீன் கடல் சமன்பாட்டை பாதுகாப்பவை. இவை பவளப்பாறைகள் அதிகம் உள்ள பகுதியில் வாழும். மழைநீரும் கடல் நீரும் சேர்ந்த உப்புத்தன்மை குறைந்த நீரில் வளரும். கடல் அலை ஏற்றத்தின் போது கடலுக்கு சென்று விடும்.
மன்னார் வளைகுடா கடல் மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் உள்ள கடற்கரை ஓரங்களில் உள்ள நன்னீர் கலக்கும் ஓடைகளில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. கடற்கரை மேலாண்மை சட்ட விதிப்படி ஆற்று முகத்துவாரம் மற்றும் நன்னீர் முகத்துவாரத்தில் 100 மீட்டருக்குள் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி பாலை மீன்களை குஞ்சுகளாக பிடித்து விடுவதால் ஆழ்கடலில் இருந்து வரும் பெரிய மீன்களுக்கு இரை கிடைக்காமல் இலங்கை நோக்கி நகர்ந்து விடுகின்றன.
இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் பாலை மீன் குஞ்சுகளை பிடிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.