/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்களை விடுவிக்க பிரதமர் வலியுறுத்த வேண்டும் மீனவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
/
இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்களை விடுவிக்க பிரதமர் வலியுறுத்த வேண்டும் மீனவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்களை விடுவிக்க பிரதமர் வலியுறுத்த வேண்டும் மீனவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்களை விடுவிக்க பிரதமர் வலியுறுத்த வேண்டும் மீனவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
ADDED : டிச 15, 2024 08:00 AM
ராமநாதபுரம் : 'இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தவும், கைதான மீனவர்களை விடுவிக்கவும் அவரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்,' என, தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் அதிபராக அனுரா குமார திசநாயகே சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தியாவிற்கு அரசு முறைப்பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பின்பேரில் வருகிறார். ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடியை அவர் சந்திக்கவுள்ளார். இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண அவரிடம் பிரதமர் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சின்னதம்பி கூறியதாவது: வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் வரை அந்நாட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகின்றனர். மீனவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறலை தடுத்து நிறுத்தவும், மனிதாபிமான முறையில் இலங்கை கடற்படையினர் நடந்து கொள்ளவும் அறிவுறுத்த இங்கு வரும் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். மேலும் 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6வது சரத்திலுள்ள பராம்பரிய மீன்பிடி உரிமையை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இந்திய - இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டு பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களின் படகுகளை சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்கவும் இச்சந்திப்பில் வழிவகை காண வேண்டும்.
இரு நாடு சிறைகளிலுள்ள மீனவர்களை பரஸ்பரம் விடுவிக்க வேண்டும். இதற்கு இரு நாடுகளும் நல்லெண்ண அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் நல்லெண்ண குழுவை இருநாட்டு அரசுகளும் ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என்றார்.