ADDED : மே 18, 2026 11:00 PM

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை கிராமங்களில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களை தேர்வு செய்து சமீப காலமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கடத்தல் அதிகரித்துள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் மே 15ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இலங்கைக்கு கடத்த இருந்த சிகரெட் பண்டல்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
கீழக்கரை அருகே செங்கழுநீரோடை மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி, தர்மராஜ் மற்றும் போலீசார் ராஜேந்திரன், சரவணகுமார், ராஜா ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கழுநீரோடை தென்னந்தோப்பு பகுதியில் கடற்கரைக்கு அருகில் 12 வெள்ளை நிற பண்டல்களில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 2.40 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். எனவே மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் கூட்டு ரோந்து அவசியம்.
