/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இனிமேல் சிரமம் தான்; பட்டு ஜவுளி, வர்த்தக பார்சல்கள், ஸ்பீடு போஸ்ட்; பரமக்குடியில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் மாற்றம்
/
இனிமேல் சிரமம் தான்; பட்டு ஜவுளி, வர்த்தக பார்சல்கள், ஸ்பீடு போஸ்ட்; பரமக்குடியில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் மாற்றம்
இனிமேல் சிரமம் தான்; பட்டு ஜவுளி, வர்த்தக பார்சல்கள், ஸ்பீடு போஸ்ட்; பரமக்குடியில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் மாற்றம்
இனிமேல் சிரமம் தான்; பட்டு ஜவுளி, வர்த்தக பார்சல்கள், ஸ்பீடு போஸ்ட்; பரமக்குடியில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் மாற்றம்
UPDATED : டிச 15, 2024 08:35 AM
ADDED : டிச 15, 2024 07:46 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் பூட்டப்பட்ட நிலையில் பட்டு ஜவுளி உள்ளிட்ட வர்த்தகர்களின் பார்சல்கள், ஸ்பீடு போஸ்ட் அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தினர்.
பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 கி.மீ.,க்கு உட்பட்ட தபால்களை பிரித்து அனுப்பும் மையமாக பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் செயல்பட்டது. இங்கு காலையில் துவங்கி இரவு வரை அனைத்து வகை பார்சல்களும், ஸ்பீடு போஸ்ட், ரிஜிஸ்டர் மற்றும் சாதாரண தபால்களும் பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் 1984 துவங்கி 40 ஆண்டு காலமாக இயங்கிய ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை மூட தபால் துறை உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஏற்படும் சிரமம் குறித்து 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டிய நிலையில் அனைத்து கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன.
ஆனால் சில தினங்களுக்கு முன் பரமக்குடி அஞ்சல் பிரிப்பக ஊழியர்கள் 20 பேர் மாற்றுப் பணியிடங்களுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் தளவாட பொருட்களும் வேனில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து முன்னாள் நகராட்சி தலைவர் போஸ் தலைமையில் கட்சியினர், பொது அமைப்பினர் வேனை மறித்து அமர்ந்தனர். பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், தபால் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தற்காலிகமாக டிச.16 வரை அலுவலகம் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் பொருட்கள் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட மாட்டாது என உறுதி அளித்தனர். இங்கு மாலை 6:00 மணிக்கு மேல் தபால், பார்சல்களை அனுப்புவது வழக்கம். தற்போது அலுவலகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் வழியாக பரமக்குடி தபால் பைகள் 5:00 மணிக்குள் பெற்றுச் செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இரவு நேர தபால்கள் கூரியரில் அனுப்பும் சூழலில், தபால் துறையை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். இதனால் பொருட்களுக்கு தற்காலிக விலை ஏற்றம் ஏற்படும்.
பரமக்குடி தலைமை தபால் நிலையத்தில் அனைத்து வகை தபால்களும் இரவு 8:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் பார்சல்களை கொண்டு செல்ல தபால் துறை வாகன சர்வீஸ் கிடையாது.
இதனால் மறுநாள் தபால் சென்று சேராத நிலையே ஏற்படும். ஆகவே நிரந்தரமாக ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை திறக்க அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.