/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்னி தீர்த்த கடலில் குப்பையால் துர்நாற்றம்
/
அக்னி தீர்த்த கடலில் குப்பையால் துர்நாற்றம்
ADDED : ஜன 30, 2025 02:28 AM

ராமேஸ்வரம்:ஹிந்துக்களின் புனித தீர்த்தமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் நேற்று, தை அமாவாசையின் போது பல ஆயிரம் பக்தர்கள் நீராடினர்.
இந்நிலையில், அக்னி தீர்த்தம் அருகே சாலையில் பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து திடக்கழிவுநீர் வெளியேறி, குளம் போல் தேங்கி அக்னி தீர்த்தத்திலும் கலந்தது.
மேலும், இப்பகுதியில் கழிவு துணிகள், பாலிதீன் கழிவுகள், உணவு கழிவுகள் குவிந்து கிடந்தன. இதை அகற்றி சுகாதாரம் பராமரிக்க, நகராட்சி நிர்வாகம் முன் வராததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், பக்தர்கள் அருவருப்புடன் நீராடிச் சென்றனர்.
திடக் கழிவு நீர் கலப்பதால் அக்னி தீர்த்தம் மாசுபட்டு புனிதம் சீரழிவதுடன், பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. இதனை தடுத்து தீர்த்தத்தின் புனிதம் காக்க ராமேஸ்வரம் நகராட்சிக்கு, 2016ல், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன் கூட, 'அக்னி தீர்த்தம் மாசுபடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடும் விதமாக, கழிவுநீர் கலந்தும், குப்பை குவிந்தும் சுகாதாரக் கேடு நிறைந்த தீர்த்தமாக மாறியிருந்தது.

