/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உற்பத்தியாகும் கருப்பட்டிகளை பாதுகாக்க தேவை கோடவுன் வசதி ; பனை மரத் தொழிலாளர், வியாபாரிகள் கோரிக்கை
/
உற்பத்தியாகும் கருப்பட்டிகளை பாதுகாக்க தேவை கோடவுன் வசதி ; பனை மரத் தொழிலாளர், வியாபாரிகள் கோரிக்கை
உற்பத்தியாகும் கருப்பட்டிகளை பாதுகாக்க தேவை கோடவுன் வசதி ; பனை மரத் தொழிலாளர், வியாபாரிகள் கோரிக்கை
உற்பத்தியாகும் கருப்பட்டிகளை பாதுகாக்க தேவை கோடவுன் வசதி ; பனை மரத் தொழிலாளர், வியாபாரிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2025 04:10 AM

சாயல்குடி,: சீசனில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டியை ஆண்டு முழுவதும் பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் கோடவுன் வசதி ஏற்படுத்த வேண்டும் என பனை மரத் தொழிலாளர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களான கீழச்செல்வனுார், மேலச்செல்வனுார், காவாகுளம், கடுகுச்சந்தை, பூப்பாண்டியபுரம், சாயல்குடி, உறைகிணறு, நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியான பனை மரங்கள் உள்ளன. இப்பகுதியில் பிரதான தொழிலாக பதநீர் இறக்குதல் மற்றும் கருப்பட்டி காய்ச்சுதல் நடக்கிறது.
பனைத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை 6 மாதங்களுக்கு கருப்பட்டி சீசன் இருக்கும். ஆண்டு முழுவதும் கருப்பட்டி நுகர்வோர்களுக்கு கிடைக்க அவற்றை பாதுகாப்பதற்கு அதிகளவில் மெனக்கெடும் சூழல் நிலவுகிறது.
சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரத்தைச் சேர்ந்த கருப்பட்டி மொத்த வியாபாரி ஜெயபாண்டியன் கூறியதாவது:
தற்போது சீசன் நேரத்தில் கிலோ கருப்பட்டி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. பதநீர் சீசன் குறைவாக வரக்கூடிய ஆடி முதல் ஆவணி, புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் கிலோவிற்கு ரூ.50 முதல் 70 வரை விலை உயர்வு இருக்கும். குளிர்காற்று பட்டால் கருப்பட்டி நெகிழ்ந்து விடும் தன்மை கொண்டது.
எனவே அவற்றை கொட்டாச்சி புகை போட்டு அதனை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகள் விளைவித்த பொருள்களை பாதுகாப்பதற்கு கோடவுன் வசதி செய்து தந்துள்ளது. அதைப்போன்று பனை மர தொழிலாளர்களின் நலன் கருதி கருப்பட்டிகளை பாதுகாக்க சாயல்குடி பகுதிகளில் அரசு சார்பில் பாதுகாக்கப்பட்ட கோடவுன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
போலி கலப்பட கருப்பட்டிகளால் பனைத் தொழிலாளர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். ரூ.180 முதல் 200 வரை விலைக்கு விற்கின்றனர். விவரம் அறியாத சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
எனவே உணவு கலப்படத் துறையினர் போலி கலப்பட கருப்பட்டிகளை முற்றிலும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் மருத்துவ குணம் வாய்ந்த கருப்பட்டி உற்பத்தி செய்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.