/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு அரசாணை
/
கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு அரசாணை
ADDED : ஜூன் 26, 2025 12:56 AM
தனியார் நெசவாளர்களும் கோரிக்கை
பரமக்குடி: கைத்தறி மற்றும் துணி நுால் துறை மானிய கோரிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை கூலியில் உயர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதே போல் தனியாருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு இணையாக கைத்தறி தொழிலை நம்பி பல லட்சம் மக்கள் தமிழகத்தில் உள்ளனர்.
இதன்படி பரமக்குடி போன்ற நகரங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இத்தொழிலை நம்பி மட்டுமே வாழ்கின்றனர். தொடர்ந்து கூலி உயர்வு, ரக ஒதுக்கீடு என பல்வேறு கோரிக்கைகள் தொழிற்சங்கங்கள், நெசவாளர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கைத்தறி மற்றும் துணி நுால் துறை மானியக் கோரிக்கையில் விலைவாசி ஏற்றம் மற்றும் நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை கூலியில் 10 சதவீதம், அகவிலை படியில் 10 சதவீதம் என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பரமக்குடி உதவி கைத்தறி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் ஆணை வந்துள்ளது.
இந்நிலையில் தனியார் மாஸ்டர் வீவர்களிடம் நெசவு நெய்யும் அனைத்து நெசவாளர்களுக்கும் கூலி உயர்வு வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும் கைத்தறிக்கென உள்ள ரக ஒதுக்கீட்டையும் அரசு முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய மஸ்துார் சங்க கைத்தறி பேரவை மாநில பொருளாளர் காசிவிஸ்வநாதன் தெரிவித்தார்.