ADDED : மே 10, 2025 07:03 AM
திருவாடானை: திருவாடானை அருகே பழங்குளத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், திருவாடானை தாசில்தார் ஆண்டி, சமூக நலத்திட்ட தாசில்தார் இந்திரஜித், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ஆரோக்கிய மேரிசாராள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, குடிநீர் இணைப்பு வழங்குதல், ரோடு வசதி, மகளிர் உதவித் தொகை உட்பட பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களையும் விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இணைப்புச் சக்கரங்கள் பொருத்தபட்ட பெட்ரோல் வாகனம், விலையில்லா தையல் இயந்திரங்கள், அயன்பாக்ஸ், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு தெளிப்பான், மற்றும் வேளாண் பொருட்கள், நுண்ணுயிர் பாசன குழாய்கள், மரக்கன்றுகள், புதிய ரேஷன் கார்டு மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.