ADDED : ஜூன் 28, 2026 10:44 PM
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் கோயில் காவலரும், முன்னாள் ராணுவ வீரரான ஜெயபாலை தாக்கிய யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினரை (கைடு) போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு வேலிகளை தாண்டி செல்பவர்களை கண்காணிக்க கோயில் நிர்வாகம் சி.சி.டி.வி., கேமரா வைத்துள்ளது. இதனால் தடுப்புகளை கடந்து பக்தர்களை நேரடியாக சன்னதிக்குள் அழைத்துச்செல்லும் 'கைடு'கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை கோயில் அலுவலக முதல் மாடியில் உள்ளது. இதனை கோயில் காவலரும், முன்னாள் ராணுவ வீரருமான ஜெயபால் தலைமையிலான காவலர்கள் குழு கண்காணிக்கிறது.
இந்நிலையில் சி.சி.டி.வி., கேமராவால் அதிருப்தியடைந்த கோயில் யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர் பிரபாகரன் 41, கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஜெயபாலை தாக்கி உள்ளார். இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செல்லதுரை கொடுத்த புகாரில் பிரபாகரனை கோயில் போலீசார் கைது செய்தனர்.
