ADDED : பிப் 11, 2026 05:53 AM

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் கேமாளிபட்டி வெள்ளைச்சாமி 35, திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் அய்யப்பன் 56, இருவரும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை கடந்த மாதம் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் மதுரை மத்திய சிறையில் இருந்த போது நண்பர்களாகி, தனியாக செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதில் வெள்ளைச்சாமி மீது 40 க்கும் மேற்பட்ட வழக்குகளும், அய்யப்பன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
