/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் மிரட்டுது மழை 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
/
ராமேஸ்வரத்தில் மிரட்டுது மழை 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
ராமேஸ்வரத்தில் மிரட்டுது மழை 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
ராமேஸ்வரத்தில் மிரட்டுது மழை 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
ADDED : நவ 22, 2024 02:24 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் தொடரும் கனமழையால் 100 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வீடுகளில் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வானிலை மையம் நேற்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்தது. இரண்டு நாட்களாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் அருகில், நகராட்சி அலுவலகம் முன்பும் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. தங்கச்சிமடம் விக்டோரியா நகர், பாம்பன் தரவைதோப்பு, தோப்புக்காடு, சின்னப்பாலம், முந்தல்முனை, சாயக்கார தெரு, மண்டபம் எருமைத்தரவை, மைக்குண்டு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.
இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாம்பனில் மழையால் பாதித்த 80 பேரை வீடுகளில் இருந்து வெளியேற்றி தனியார் மண்டபத்தில் வருவாய்துறையினர் தங்க வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் 411 மி.மீ., மழை பதிவான நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை 438 மி.மீ., மழை பெய்தது. அதற்கு அடுத்தபடியாக தங்கச்சிமடத்தில் 338, பாம்பன் 280, மண்டபம் 271, ராமநாதபுரம் 125 மி.மீ., பெய்தது.
தொடர் மழையால் ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இன்றும் நாளையும் ராமேஸ்வரம் பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறையினர் வலியுறுத்தினர்.