ADDED : ஜன 31, 2026 05:24 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலை ரவுண்டானாவில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு எரியாமல் அப்பகுதி இருளில் மூழ்குவதால் விபத்து அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் தீயணைப்பு நிலையம் இருந்து செல்வநாயகபுரம் விலக்கு ரோடு வரையும், முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து நீதிமன்றம் வரையிலும் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
இங்கு 4 இடங்களில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு இல்லாமல் இருப்பதால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சில நேரங்களில் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. புறவழிச்சாலை ரவுண்டானாவில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ஒரு வாரத்திற்கு முன்பு ரவுண்டானாவில் புதிதாக உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.
இந்த விளக்கு தற்போது வரை எரியாமல் இருப்பதால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ள நிலை தொடர்கிறது. எனவே புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
