ADDED : பிப் 17, 2026 05:58 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களிடம் பிச்சை எடுத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 7000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 25 ஆண்டுகளாக பணி நிரந்தரம் உள்ளிட்ட எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படாமல் உள்ளது.
மாநிலம் முழுவதும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அவர்கள், நீதிமன்ற உத்தரவின் படி யு.ஜி.சி., ஊதியம் ரூ.57,200 வழங்க வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 12 மாத சம்பளம் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
பரமக்குடி கல்லுாரி வளாகத்தில் நேற்று 40 பெண் கவுரவ விரிவுரையாளர்கள் உட்பட 60 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி தரையில் துண்டு விரித்து மாணவர்களிடம் பிச்சை எடுத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
