/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜன 30, 2025 05:06 AM

ராமநாதபுரம்: அரசு கலைக்கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் தமிழகத்தில் உயர்கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் அனைத்து சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு செய்து தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் அருகே சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 164 கல்லுாரிகளில் 7300 கவுரவு விரிவுரையாளர்கள் சொற்ப சம்பளத்தில் பணிபுரிகிறோம். சம்பளம் ரூ.4000த்தில் இருந்து தற்போது ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பல்கலை மானியக்குழு பரிந்துரைப்படி குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி சம்பளத்தை அரசு வழங்க வேண்டும்.
பணி பாதுகாப்பு வேண்டும். பணி நிரந்தரம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து கல்லுாரிகளிலும் உள்ள கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லுாரிக்குள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பெரும்பான்மை கவுரவ விரிவுரையாளர்கள் தான் கல்லுாரியில் கற்பிக்கும் பணியில் உள்ளனர். தொடர் வகுப்பு புறக்கணிப்பு செய்வதால் உயர் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
*பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் நேற்று மதியம் வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.