ADDED : செப் 23, 2026 12:00 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கும்பரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் 45. இவருக்கு ரேவதி 35, என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். வெளி நாட்டில் வேலை பார்த்த பூமிநாதன் போதிய வருமானம் இல்லாததால் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் சொந்தமாக தொழில் துவங்கிய நிலையில் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் பூமிநாதன் மது அருந்தி வந்து மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனால் இருவரும் பிரிந்த நிலையில் பூமிநாதன் சாலைதோட்டத்தில் பெரியம்மா முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த ஏப்ரலில் பூமிநாதன் ரேவதியின் காலில் வெட்டியதில் காயமடைந்தார். இதில் உச்சிப்புளி போலீசார் பூமிநாதனை கைது செய்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தவர் மீண்டும் ரேவதியுடன் தகராறில் ஈடுபட்டார்.
நேற்று முன்தினம் இருவருக்கும் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரேவதி, போதையில் இருந்த பூமிநாதனை கட்டையால் தாக்கியதில் மயங்கி விழுந்தார். அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரேவதி அனுமதித்தார். அங்கு பூமிநாதன் நேற்று உயிரிழந்தார். ரேவதியை போலீசார் கைது செய்தனர்.
