தேவேந்திர குல வேளாளரை பட்டியலில் இருந்து வெளியேற்றுவேன்: சீமான் பேச்சு
தேவேந்திர குல வேளாளரை பட்டியலில் இருந்து வெளியேற்றுவேன்: சீமான் பேச்சு
ADDED : ஏப் 14, 2026 10:10 PM

பரமக்குடி: ''தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வைப்பேன்,'' என பரமக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அவர் பேசியதாவது: தமிழகத்தை தி.மு.க., அ.தி.மு.க., இந்தியாவை காங்., பா.ஜ., தான் மாறி மாறி ஆள்கின்றன. இவர்கள் தான் நமக்கு தற்போது உள்ள பிரச்னைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். காவிரி தண்ணீர் தரமுடியாது என்று சொன்ன கட்சியை அழைத்து கொண்டு தி.மு.க., ஓட்டு கேட்டு வருகிறது. தி.மு.க., வுக்கு மாற்று அ.தி.மு.க., என்று எப்படி கூற முடியும். தீமைக்கு மாற்று எப்படி தீமையாக இருக்க முடியும். தீமையை நன்மையை வைத்து ஒழிக்க வேண்டும்.
தி.மு.க., வந்தாலும், அ.தி.மு.க., வந்தாலும் மக்களின் பிரச்னைகள் தீராது. தமிழ்நாட்டை இத்தனை ஆண்டுகள் ஆண்ட கட்சிகளால் எந்த மாற்றத்தை கண்டீர்கள். இலவசம் என்பது ஏமாற்று. வெனிசுலா நாடு இலவசத்தை வழங்கியதால் தான் வீழ்ந்தது. மறுபடியும் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தால் இலவசத்தையும், பணத்தையும் கொடுப்பர். படித்த மக்களுக்கு தெரியவேண்டும். இலவசம் என்பது ஒரு ஏமாற்று என்று. எந்த நாட்டிலாவது இலவசம் வழங்கப்படுகிறதா. தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. படிக்கவில்லை என்றாலும் அரசு வேலை தருகிறேன்.
பரமக்குடியில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு என பல்வேறு வசதிகள் உள்ளன. படித்தவன் மது அருந்தி கொண்டு இருக்கும் போது படிக்காதவன் கால்நடை வளர்ப்பதில் எவ்வித தவறும் இல்லை. விவசாயத்தை அரசு கையில் எடுத்து அரசு பணியாக மாற்றினால் மக்களின் வாழ்விடத்திலேயே வேலைவாய்ப்பு வழங்க முடியும். தேவேந்திரர் குல வேளாளர் மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். பட்டியலின மக்களுக்கு 18 சதவீதம் இடஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதத்தை அருந்ததியர் மக்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். இதிலும் முன்னுரிமை என்ற பெயரில் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் பரமக்குடியில் வந்து 3 சதவீத இடஒதுக்கீட்டை தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் இருந்து அருந்ததியர்களுக்கு எடுத்து கொடுத்தது நாங்கள் தான் என்று கூற துணிவு இருக்கிறதா. தேவேந்திர குல வேளாளர் இடஒதுக்கீட்டை எடுத்து கொடுத்துவிட்டு எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள். அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது சரி. நான் ஆட்சிக்கு வந்தால் வட்டியுடன் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீட்டை பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும். தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
----
