/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில்.. மக்கள் தவிப்பு ; 50 ஆண்டுகளாக இயக்கப்பட்ட பஸ் சேவை நிறுத்தம்

ADDED : பிப் 28, 2024 04:45 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழ்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படாத நிலையில் 50 ஆண்டுகளாக இயக்கப்பட்ட தனியார் பஸ் சேவையும் நிறுத்தப்பட்டதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிக்கின்றனர்.
கமுதி அருகே கீழ்குடி கிராமத்திற்கு மதுரையிலிருந்து காரியாபட்டி, திருச்சுழி, மண்டலமாணிக்கம், கமுதி, கே.வேப்பங்குளம் வழியாக கீழ்குடி கிராமத்திற்கு காலை 7:30 மணிக்கு தனியார் பஸ் சேவை இயக்கப்பட்டது. காலை 9:10க்கு அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு மதியம் 12:30 மணிக்கு சென்றடைந்தது.
பின் மதியம் 2:00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மாலை 4:30 மணிக்கு கீழ்குடி வந்து சேரும் வகையில் 50 ஆண்டுகளாக தனியார் பஸ் சேவை அளிக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் சேவை கடந்த ஆறு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் அரசு பஸ் சேவையும் இல்லாததால் கமுதியில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆட்டோவில் 15 கி.மீ., பயணித்து கே.வேப்பங்குளத்திற்கும், கீழ்குடிக்கும் சென்று வருகின்றனர். அவசரத்திற்கு பஸ் வசதியில்லாததால் அரிசிக்குழுதான், சேந்தனேந்தல், சீமானேந்தல், மாவிலங்கை, குந்துகுளம், ஒழுகுபிடி, வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம், கீழ்குடி உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து சேவை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எஸ்.லட்சுமணன், விவசாயிகள் சங்கத்தலைவர், கே.வேப்பங்குளம்: எங்கள் கிராமங்களுக்கு மதுரையில் இருந்து தனியார் பஸ் சேவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அளிக்கப்பட்டு வந்தது. ஆறு மாதமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோக்களில் மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் செலவு செய்து பயணிக்கின்றனர்.
பல முறை ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ் சேவை அளிக்க வேண்டும் என்றார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ----------