/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் முழுமை பெறாத புறவழிச்சாலை
/
முதுகுளத்துாரில் முழுமை பெறாத புறவழிச்சாலை
ADDED : செப் 23, 2024 04:45 AM

முதுகுளத்துார் : -முதுகுளத்துாரில் புறவழிச்சாலை திட்டம் முழுமை பெறாத நிலையில் கண்மாய் அருகே ரோடு அமைப்பதற்காக பொதுப்பணித்துறையினரிடம் தடையில்லா சான்று பெறுவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர்காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துாரில் இருந்து கடலாடி முக்கு ரோட்டில் சாயல்குடி வழியாக அருப்புக்கோட்டை செல்லும் முக்கிய ரோடு உள்ளது. இங்கு மறவர் தெருவில் இருபுறமும் வீடுகள், ரோட்டோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது.
இதனால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
திருவிழாக்கள், முகூர்த்த நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். தினமலர் நாளிதழ் பலமுறை செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டி உள்ளது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர்கள் ஜெ., பழனிச்சாமி அறிவித்தும் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புறவழிச்சாலை அமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இச்சாலையானது முதுகுளத்துார் - பரமக்குடி ரோடு வேளாண்மை சேமிப்பு கிடங்கு அருகில் துவங்கி கண்மாய் கரை, அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக நீதிமன்றம் வரை முதற்கட்டமாக சாலை அமைக்கும் பணி நடந்தது.
தற்போது வேளாண் சேமிப்பு கிடங்கில் இருந்து செல்வநாயகபுரம் முக்கு ரோடு வரையும், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து நீதிமன்றம் வரை புதிதாக ரோடு அமைக்கும் பணி முடிந்துள்ளது.
வெங்கலகுறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமார் கூறியதாவது: முதுகுளத்துார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த புறவழிச்சாலை திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி நடந்தது.
ஒருசில இடங்களில் மட்டும் புதிதாக ரோடு அகலப்படுத்தபட்டு பணிகள் முடிந்துள்ளது. ஆனால் புறவழிச்சாலை திட்டம் முழுமை பெறவில்லை.
தற்போது புதிய ரோடுகளை இணைக்கும் விதமாக கண்மாய்க்கரை அருகே எந்த விதமான பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட ரோடு பணியை துவக்கி வைத்து ஓரளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
டிரைவர் மாரி கூறியதாவது: முதுகுளத்துார் பகுதியில் கடலாடி முக்கு ரோட்டில் இருந்து சாயல்குடி செல்லும் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எதிரே வாகனங்கள் வந்தால் வழிவிட்டு செல்வது சிரமமாக உள்ளது. புறவழிச்சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் முழுவதுமாக அமைக்கப்படாமல் கிடப்பில் விடப்பட்டுள்ளது.
எனவே கண்மாய்க்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டை இணைத்து முதுகுளத்துார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முதுகுளத்துார் பகுதியில் முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு, செல்வநாயகபுரம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து நீதிமன்றம் வரை புதிதாக ரோடு அகலப்படுத்தப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.
ஆனால் முதுகுளத்துார் பெரிய கண்மாய் பகுதியில் புறவழிச்சாலைக்காக ரோடு அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தடையில்லா சான்று பெறுவதற்காக மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உரிய ஆணை பெறப்பட்டு விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்து முழுமையாக புறவழிச்சாலை திட்டம்அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.