
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் பிச்சைமூப்பன் வலசை சூழல் சுற்றுலா மையத்திற்கு செல்வதற்கு தேவையான நல்ல சாலை வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறையும் அபாயம் உள்ளது.
மன்னார் வளைகுடா கடல் அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாகவும், சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வேண்டிய இடமாகவும் உள்ளது. ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை சூழல் சுற்றுலா மையமாக செயல்படுகிறது. இங்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு கடலுக்குள் இயற்கையாக அமைந்த மணல் திட்டு 15 சென்ட் அளவுள்ள நிலப்பரப்பாக உள்ளது. கரையில் இருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் உள்ள மணல் திட்டை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் படகில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
2020ம் ஆண்டு துவக்கப்பட்ட மன்னார் வளைகுடா சூழல் சுற்றுலா தளத்திற்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் பிச்சை மூப்பன் வலசை சுற்றுலா தளத்திற்கு செல்ல படகு கட்டணமாக நபருக்கு ரூ. 200 வசூல் செய்யப்படுகிறது.
மே, ஜூன், ஜூலை, ஆக., மாதங்களில் பேரலைகளின் தாக்கம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக இங்கு சுற்றுலா படகு சவாரி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சுற்றுலாப் படகு போக்குவரத்து துவங்கியுள்ளது.
இங்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை. சுற்றுலாப் படகில் 12 பேர் வீதம் பயணம் செய்யலாம். மணல் திட்டுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே நெருக்கமாக காணப்படும் பல்வேறு வகையான பவளப்பாறைகளின் வடிவங்கள், கடல் புற்கள், அரியவகை கடல்வாழ் உயிரினங்களை கண்ணாடி இழையிலான படகில் கண்டு ரசிக்கலாம்.
படகு போக்குவரத்து இயக்க அலுவலர்கள் கூறியதாவது:
பள்ளி கல்லுாரி மாணவர்கள் கடல் சார் உயிரினங்களின் அறிவியல் மற்றும் சூழலியல் நிலைகளை நேரடியாக காண்பதற்கு இவ்வகை மணல் திட்டு பயன்படுகிறது. ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
அரிய பல தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மன்னார் வளைகுடா கடலில் வசிக்கும் கடல் ஆமை, கடல் பசு, டால்பின், கடல் புல், பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளின் படங்களை அழகுற காட்சிப்படுத்தி வைத்துள்ளோம். இவை 2 ஏக்கரில் கரைப்பகுதியில் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதே நேரம் பிச்சை மூப்பன் வலசை சுற்றுலா மையத்திற்கு செல்வதற்கு சரியான ரோடு வசதி இல்லை. ஒற்றையடி பாதை போன்ற சிறிய ரோட்டில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் தற்போதுள்ள சிறிய ரோடும் குண்டும் குழியுமாக உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும் இங்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ரோடு வசதி, பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்டை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.