ADDED : மார் 27, 2025 07:15 AM
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வறண்டு கிடக்கும் கிணறுகளை துார்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணறுகள் துார்ந்து போய் உள்ளன.
அத்தகைய வறண்ட, பயனற்ற கிணறுகளை மீண்டும் துார்வாரி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாடானை மக்கள் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு நீர் ஊற்று உள்ள இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டது. அந்த கிணறுகளால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் பயனடைந்தனர். நாளடைவில் கிணறு துார்ந்து விட்டதால் மீண்டும் துார்வாரி செயல்பாட்டிற்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெரும்பாலான ஊராட்சிகளில் அமைக்கபட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் திட்டம் தோல்வியடைந்து அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே கிராமங்களில் நீர் ஊற்று உள்ள இடங்களில் கிணறுகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.