/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு சோலார் வேலி அமைக்க மானியம் தர வலியுறுத்தல்; . மான்கள், காட்டுப்பன்றியால் பயிர்கள் சேதம்
/
விவசாயிகளுக்கு சோலார் வேலி அமைக்க மானியம் தர வலியுறுத்தல்; . மான்கள், காட்டுப்பன்றியால் பயிர்கள் சேதம்
விவசாயிகளுக்கு சோலார் வேலி அமைக்க மானியம் தர வலியுறுத்தல்; . மான்கள், காட்டுப்பன்றியால் பயிர்கள் சேதம்
விவசாயிகளுக்கு சோலார் வேலி அமைக்க மானியம் தர வலியுறுத்தல்; . மான்கள், காட்டுப்பன்றியால் பயிர்கள் சேதம்
ADDED : ஜூலை 13, 2024 04:31 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மான்கள், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையில் இழப்பீடு வழங்க இழுத்தடிப்பதால் சோலார் வேலி அமைக்க அரசு மானியம் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, மண்டபம், உச்சிபுளி, நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த சீமைக்கருவேல மரக்காடுகள் பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் சுற்றித்திரிகின்றன.
இரவு நேரத்தில் இந்த பகுதிகளில் நெற்பயிர், மிளகாய், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதற்குரிய இழப்பீட்டு தொகையை வழங்க விண்ணப்பித்தால் அதிகாரிகள் உடனடியாக வழங்குவது இல்லை. மிகவும் காலதாமதம் செய்வதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
பரமக்குடியை சேர்ந்த காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் மலைச்சாமி கூறியதாவது:
இரவு நேரத்தில் கூட்டமாக புள்ளி மான்கள் வயலில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதற்குரிய இழப்பீடு கேட்டு வனத்துறை, வேளாண்துறையில் பலமுறை புகார் அளித்தும் பெயரளவில் நடவடிக்கை உள்ளது.
ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் வன விலங்குகளால் பயிர் சேதமடைந்தால் இழப்பீடு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர். இதில் உடன் நடவடிக்கை எடுப்பது இல்லை. மிகவும் தாமதாக சிலருக்கு தான் இழப்பீடு தொகை தருகின்றனர்.
மேலும் சோலார் வேலி அமைக்க வேண்டும் என்றால் 15 ஏக்கர் நிலம் வேண்டும் என்கின்றனர். இதனால் காட்டு மாடுகள், புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்படும் சிறு, குறு விவசாயிகள் சோலார் வேலி அமைக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் வன விலங்குகள் தொந்தரவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே விலங்குகளால் சேதப்படுத்தும் பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், சோலார் வேலி அமைக்க அரசு மானியம் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கூறுகையில், கடந்த ஆண்டில் வன விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்குரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பயிர் சேதத்திற்குரிய விபரங்கள் விவசாயிகள் பெறப்பட்டுள்ளது.
விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சோலார் வேலி அமைக்க வேளாண் துறையில் மானியம் பெறலாம், வனத்துறையில் திட்டம் இல்லை என்றார்.-----