ADDED : டிச 17, 2024 03:39 AM
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் வட்டாரத்தில் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் தலைமையில் ஆய்வு செய்தனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய் சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்து வந்தனர். தற்போது முதுகுளத்துார் வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே பலத்த மழை பெய்தது.
இதையடுத்து முதுகுளத்துார் அருகே காக்கூர் தேரிருவேலி, வளநாடு, மட்டியரேந்தல், தாளியரேந்தல், பொன்னக்கனேரி, சாம்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய்,நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்தும் வீணாகி உள்ளது. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக முதுகுளத்துார் வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் முதுகுளத்துார் அருகே சாம்பகுளம், உடைகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் சேதமடைந்துள்ள பயிர்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.