/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எனது அதிகாரத்தில் தலையிடுவதால் பணி செய்வதற்கு விருப்பம் இல்லை உள்துறை செயலாளருக்கு இன்ஸ்பெக்டர் கடிதம்
/
எனது அதிகாரத்தில் தலையிடுவதால் பணி செய்வதற்கு விருப்பம் இல்லை உள்துறை செயலாளருக்கு இன்ஸ்பெக்டர் கடிதம்
எனது அதிகாரத்தில் தலையிடுவதால் பணி செய்வதற்கு விருப்பம் இல்லை உள்துறை செயலாளருக்கு இன்ஸ்பெக்டர் கடிதம்
எனது அதிகாரத்தில் தலையிடுவதால் பணி செய்வதற்கு விருப்பம் இல்லை உள்துறை செயலாளருக்கு இன்ஸ்பெக்டர் கடிதம்
ADDED : ஜன 13, 2025 12:59 AM

ராமநாதபுரம்: -''எனது அதிகாரத்தில் தலையிடுவதால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியவில்லை என்பதால் பணி செய்ய விருப்பமில்லை,'' என உள்துறை செயலாளருக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:16 ஆண்டுகளாக போலீஸ் துறையில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு கீழ் பணிபுரியும் போலீசாருக்கு திருவாடானை டி.எஸ்.பி., அலுவலக எழுத்தர் என்னிடம் கேட்காமல் தன்னிச்சையாக வேலைகளை கொடுத்து எனது நிர்வாகத்தில் தலையிட்டு நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து தங்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளேன்.
சட்டம் ஒழுங்கு பொது அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்பெக்டரின் டிரைவரை வேறு பணிக்கு அழைப்பதும், எனது கவனத்திற்கு தெரிவிக்காமல் வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மாற்றுப்பணிக்கு போலீசாரை எடுப்பதும் தொடர்ந்து நடக்கிறது.
எனவே என்னால் இன்ஸ்பெக்டர் பணியை திறம்பட செய்ய முடியவில்லை. தற்போது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன பணிக்கு ஒரு எஸ்.ஐ., 14 போலீசாரை என்னிடம் தெரிவிக்காமல் தன்னிச்சையாக நியமித்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ., க்கள், 3 சிறப்பு எஸ்.ஐ., க்கள், 5 ஏட்டுகள், 5 முதல் நிலை போலீசார், 36 இரண்டாம் நிலை போலீசார் என 50 பேர் பணிபுரிய வேண்டும். தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள், 4 சிறப்பு எஸ்.ஐ., 8 ஏட்டுகள், 6 முதல் நிலை போலீசார், 21 இரண்டாம் நிலை போலீசார் என 42 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 10 பேர் என் அனுமதியில்லாமல் அயல் பணியில் உள்ளனர். இதனால் 328 புலன் விசாரணை வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளின் விபரங்களை கம்ப்யூட்டரில் ஏற்றும் பணிக்கு ஒரு சிறப்பு எஸ்.ஐ., மட்டுமே உள்ளார்.
புலன் விசாரணை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்ட தனிப்பிரிவு அலுவலக உத்தரவின் பேரில் திருவாடானை டி.எஸ்.பி., அலுவலகத்தில் தன்னிச்சையாக ஆர்.எஸ்.மங்கலத்தில் பணிபுரியும் போலீசாரை நியமனம் செய்து என்னுடைய நிர்வாகத்தில் தலையிட்டு நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்துவதால் ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தொடர்ந்து இன்ஸ்பெக்டராக பணி புரிய விருப்பம் இல்லை. சட்ட ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியவும் விருப்பமில்லை.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், கடிதத்தில் பொதுவான பிரச்னைகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் இந்த பிரச்னை உள்ளது.போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர். அரசு வாரம் ஒரு நாள் போலீசாருக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. பற்றாக்குறை காரணமாக யாருக்கும் விடுமுறை தர முடியவில்லை.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி விசாரணைக்கு உள்ள போலீசாரை விசாரணைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிர்வாகத்திற்கு, பாதுகாப்புக்கு தனித்தனியாக போலீசார் இருக்க வேண்டும்.போலீசார் பற்றாக்குறை காரணமாக மன உளைச்சலில் பணிபுரியும் நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.எஸ்.பி., சந்தீஸ் கூறுகையில், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் இருந்து இது போன்ற கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை என்றார்.