ADDED : ஜூன் 18, 2025 10:21 PM

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மணிவலை கிராம கண்மாயில் பெண் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புத்துரை. இவரது மனைவி உத்திரவள்ளி 38. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கருப்புத் துரை இறந்து விட்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். உத்தரவள்ளி குடும்பத்தை கவனிக்க சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மணிவலை கண்மாய் பகுதிக்குச் சென்று சீமைக் கருவேல மரம் வெட்டியவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கவில்லை.
சிக்னல் மூலம் அவரது அலைபேசி மணிவலை கண்மாய் பகுதியில் இருந்தது தெரிந்தது . அதனை வைத்து கண்டறிந்ததில் உடலில் கழுத்து மற்றும் தொடை, வயிற்றுப் பகுதிகளில் தீக்காயங்களுடன் உத்தரவள்ளி இறந்து கிடந்தார். சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த புதருக்குள் கிடந்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரிந்தது. கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கும் சாயல்குடி போலீசார் தொடர்புடையவர்களை தேடுகின்றனர்.