ADDED : பிப் 21, 2026 07:17 AM

ராமநாதபுரம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ராமநாதபுரம் மண்டல அலுவலகம் முன் சுமைத்துாக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுமைத்துாக்கும் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் அங்கீகாரத் தேர்தலை உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட செயலாளர் முனியசாமி கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்ற மண்டல அளவில் குழு அமைத்து ஆய்வு செய்து பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர். இந்த ஆணையை சில மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். குழு அமைக்காமல் அமைத்தது போன்ற கடிதத்தை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
பொது விநியோக திட்டத்திற்காக மூடைகளை ஏற்ற செயல்படும் தொழிலாளர்களை குழுவில் சேர்க்காமல் சேமிப்பு கிடங்குகளில் உள்ள தொழிலாளர்களை குழு உறுப்பினராக சேர்த்து உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டல அளவில் போராட்டம் நடத்தப் படுகிறது. இன்று (பிப்.21) முதல் அந்தந்த கிடங்கு களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மாவட்ட தலைவர் மாரிமுத்து, பொருளாளர் முருகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
