/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே மனம் திறக்கும் மாணவர்கள்
/
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே மனம் திறக்கும் மாணவர்கள்
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே மனம் திறக்கும் மாணவர்கள்
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே மனம் திறக்கும் மாணவர்கள்
ADDED : பிப் 20, 2025 07:10 AM

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்விக்கொள்கைப் படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்க வேண்டும்.
முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம்; மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தமிழகத்தில் கருத்து பரவுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போது மார்க்சிஸ்ட் ஆட்சியிலும் சரி அங்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் தான் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் மூன்றாவது மொழியை கற்பிக்கின்றனர். மாணவர்கள் விரும்பி கற்பதை தமிழக அரசியல்வாதிகள் தடுப்பது ஏன். மாணவர்களின் படிப்பில் அரசியல் என்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. யாருடைய எதிர்காலத்தை வைத்து அரசியல் நடக்கிறதோ... அவர்களிடமே (மாணவர்கள்) மூன்று மொழியை கற்பது குறித்து கேட்டோம்... ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கூறியது:
பன்மொழி கற்றல் அவசியம்
- ஆர்.குருராஜலட்சுமி
ராமநாதபுரம்
பள்ளி பருவம் முதல் தாய்மொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஹிந்தி கற்றுக்கொள்கிறேன். கூடுதலாக ஒரு மொழியைப் பேச, எழுத கற்றுக்கொள்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக புதுடில்லி, ராஜஸ்தான், உ.பி., உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது அந்த ஊர் மக்களுடன் தொடர்பு கொள்ள ஹிந்தி உதவியாக உள்ளது. ராமேஸ்வரம் போன்ற நம் ஊர் கோயில்கள், சுற்றுலா இடங்களுக்கு வரும் வடமாநில பயணிகளுக்கு நம்மால் உதவ முடியும். எனவே தாய்மொழி தமிழ் மொழியுடன் மாணவர்கள் முடிந்தவரை தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பன்மொழிகளில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
நான் ஹிந்தி மொழி படிக்கிறேன்
- எம்.ஆர்.ஸ்ரீராம்பரமக்குடி
தமிழ், ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது மொழி ஒன்றை படிக்க வேண்டும் என்பதே ஆசை. புதிய கல்வி கொள்கையில் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்று கூறாததால் ஏதாவது மொழியை தேர்வு செய்ய முடியும். சி.பி.எஸ்.சி., படிக்கும் நான் ஏற்கனவே ஹிந்தி மொழி படித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் கூடுதலாக இந்திய அளவில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி படிப்பதால் அதன் கலாசாரம் மற்றும் தொன்மை குறித்து அறிய உதவும். வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் பணிக்கு செல்லும் போது பிற மொழி கற்றால் தன்னம்பிக்கை வளரும்.
தனி மனிதன் உரிமை
- கே.ரோஹித்திருப்புல்லாணி
மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் அடுத்து மூன்றாவது மொழி ஒன்றை படிக்க வேண்டும் என்பதுதான் திட்டத்தின் முக்கிய அம்சம். சென்னையை கடந்து எங்கு சென்றாலும் இந்திய மொழிகளில் ஒன்றான ஹிந்தி அவசியத் தேவையாகிறது. இளம் வயது முதல் பள்ளிப் பருவத்தில் அனைத்து மொழிகளையும் கற்பதன் அவசியத்தை பெற்றோர் மாணவர்கள் மனதில் பதிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். கல்விக்கு கரை என்பதே கிடையாது. அந்த வகையில் மொழி புலமை மிகவும் அவசியம். இதன் மூலம் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கிறது. ஏழை மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் படிக்கின்றனர். மூன்றாவது மொழியாக ஹிந்தி தவிர இந்திய மொழிகள் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்வது ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமை. மாநில பாடத்திட்ட மாணவர் நான் பிற மொழி கற்க விரும்புகிறேன்.
பிற மாநிலங்களில் தமிழ் விருப்ப மொழி
- உ.சாரதிதிருவாடானை
புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி திட்டம் மாணவர்களுக்கு அத்தியாவசியத் தேவை. ஏனென்றால் வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது மூன்றாவது மொழி கற்றிருந்தால் அந்த மாநில மக்களோடு பேசி பழக வாய்ப்பாக அமையும். பிற மாநிலங்களில் மாணவர்கள் தமிழை விருப்ப மொழியாக தேர்வு செய்துள்ளனர். எனவே ஹிந்தியை கற்றுக் கொள்வதால் தவறில்லை. வேலைவாய்ப்பிற்கும் பயனுள்ளதாக அமையும். எனவே மும்மொழி திட்டம் வரவேற்கத்தக்கது.
உயர் கல்விக்கு மும்மொழி அவசியம்
- ஆர்.செந்துார்ராஜா
ராமேஸ்வரம்
தமிழ், ஆங்கிலம் மட்டும் படிப்பதால் மொழி பிரச்னை ஏற்பட்டு இந்தியாவில் பல பகுதியில் உயர் கல்வி படிக்கவும், வியாபாரம் ரீதியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. ஆகையால் மூன்றாவது மொழியாக ஹிந்தியை படிப்பது மிக அவசியம். இதன் மூலம் இந்திய அளவில் உயர் கல்வி படிக்கலாம். மத்திய அரசின் அனைத்து பணிகளிலும் எந்த இடத்திலும் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இன்றைய நவீன காலத்தில் பழைய கதைகளை மறந்து விட்டு தமிழகத்தில் 3ம் மொழியை அதுவும் ஹிந்தி படிப்பது அவசியம் என்பதை அரசு, அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்
- நமது நிருபர் குழு -
.

