ADDED : ஜூன் 12, 2026 10:42 PM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உறவினரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு பரமக்குடி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலாடி தெற்கு நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்சுகனி மகன் முகமதுஅலிகான் 37. இவரது பெரியம்மா மகன் அதே ஊரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் 40. இவர்கள் இருவரும் வாடகை கார் ஓட்டி தொழில் செய்தனர். இதில் முகமதுஅலிகான் அடிக்கடி மதுபோதையில் மனைவி, அருகில் உள்ள உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அப்துல் அஜீஸ் தட்டி கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டது. 2023 அக்., 22ல் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மதுபோதையில் இருந்த முகமதுஅலிகான், அப்துல்அஜீசை கத்தியால் குத்தி கொலை செய்தார். சாயல்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.
பரமக்குடியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு, விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நேற்று நீதிபதி பாலமுருகன், முகமதுஅலிகானுக்கு ஆயுள் தண்டனை, ரூ.500 அபராதம், அத்தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை என தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் ஜான்ராஜதுரை ஆஜரானார்.
