/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு முள்ளுவாடி கிராம மக்கள் மனு
/
குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு முள்ளுவாடி கிராம மக்கள் மனு
குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு முள்ளுவாடி கிராம மக்கள் மனு
குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு முள்ளுவாடி கிராம மக்கள் மனு
ADDED : ஜூன் 18, 2025 11:29 PM

திருப்புல்லாணி: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி முள்ளுவாடியில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
முள்ளுவாடியில் 1500 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழாய்கள் காட்சி பொருளாக உள்ளது. ஏற்கனவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட குழாய்களில் குடிநீர் வரத்து இல்லை.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் கண்டு கொள்ளாத நிலையை சுட்டிக்காட்டி முள்ளுவாடியில் இருந்து நுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனு அளிப்பதற்காக நேற்று காலை 11:00 மணிக்கு வந்திருந்தனர். முள்ளுவாடி கிராம மக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட குழாய்களில் இருந்து குடிநீர் முறையாக வருவதில்லை. ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில் தண்ணீர் வரத்து அதிகமாகியும், மேடான பகுதியில் தண்ணீர் வராமல் காட்சி பொருளாக உள்ளது.
குடம் குடிநீரை ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். வருமானத்தின் ஒரு பகுதி குடிநீருக்கே செலவிட வேண்டி உள்ளது. குடிநீர் குழாய்க்காக பதிக்கப்பட்ட குழாய்களில் பல இடங்களில் பழுது ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
எனவே மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஊராட்சியில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர்.
திருப்புல்லாணி பி.டி.ஓ., கோட்டை இளங்கோவன் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அனைவருக்கும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.