ADDED : மார் 30, 2026 10:05 PM

பரமக்குடி: தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ள நிலையில் பரமக்குடியில் பெரும்பாலான ஏ.டி.எம்., கள் செயல்படாததால் வியாபாரிகள் அவதி அடைகின்றனர்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு மக்களும் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் பறக்கும் படை மற்றும் நிலையான குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் தொகைகளை ஏ.டி.எம்., அல்லது வங்கிகளில் சென்று செலுத்துகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பெரும்பாலான ஏ.டி.எம்., கள் செயல்படாமல் இருக்கிறது.
இதனால் காலை நேரங்களில் வங்கிகளை பயன்படுத்தினாலும், அவசர தேவைக்கு பொருட்களை வாங்க மாலை, இரவு நேரங்களில் ஏ.டி.எம்.,களை நாடும் நிலை உள்ளது. அப்போது பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே தேர்தல் நடத்தை விதிமுறைகளில் பண பரிமாற்றத்திற்கான தொகையை அதிகரிப்பதுடன், ஏ.டி.எம்., களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
