/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வட மாநில தொழிலாளி கொலை: கைது 2 * இருவர் கைது
/
வட மாநில தொழிலாளி கொலை: கைது 2 * இருவர் கைது
ADDED : மார் 13, 2024 01:25 AM

தேவிபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் வட மாநில தொழிலாளியை வெட்டி கொலை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜீவன் லால் குஷ்வாகா 29. இவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் தேவிபட்டினம் தர்கா தோப்பு பகுதியில் தங்கி ஹாலோ பிளாக் சாலை அமைத்தல், கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஜீவன் லால் குஷ்வாகாவை விழாவிற்கு அழைத்துச் சென்றனர். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பாததால் அவருடன் தங்கி இருந்த தொழிலாளர்கள் அவரை தேடினர். இரவு 12:00 மணியளவில் தர்கா தோப்பு தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பல இடங்களில் அரிவாளால் வெட்டுப்பட்டு ஜீவன்லால் குஷ்வாகா கொலை செய்யப்பட்டு கிடந்தார். கட்டுமானத் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற தமிழகம் வந்த வட மாநில தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது உடலை மீட்ட போது கல்லையும் கட்டி இருந்தனர். மேலும் உடலை சுற்றி பிளாஸ்டிக் தார்ப்பாயை கட்டி இருந்ததால் உடலை கடலில் வீச கொலையாளிகள் திட்டமிட்டிருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.
இக்கொலை தொடர்பாக தேவிபட்டினம் முத்துநகரைச் சேர்ந்த முனியாண்டி மகன் விஸ்வநாதன் 32, புதுவலசையைச் சேர்ந்த முனியாண்டி மகன் நவநீதனை 27, போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில் நவநீதன் தாய் குறித்து ஜீவன்லால் குஷ்வாகா தவறாக பேசியதால் 2 பேரும் கொலை செய்துள்ளனர் என்றனர்.

