/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செப்டிக் டேங்க் அமைக்காமல் கட்டப்பட்ட சுகாதார வளாகம் ஆய்வு செய்யாத அதிகாரிகள்
/
செப்டிக் டேங்க் அமைக்காமல் கட்டப்பட்ட சுகாதார வளாகம் ஆய்வு செய்யாத அதிகாரிகள்
செப்டிக் டேங்க் அமைக்காமல் கட்டப்பட்ட சுகாதார வளாகம் ஆய்வு செய்யாத அதிகாரிகள்
செப்டிக் டேங்க் அமைக்காமல் கட்டப்பட்ட சுகாதார வளாகம் ஆய்வு செய்யாத அதிகாரிகள்
ADDED : ஜன 30, 2025 05:11 AM
கடலாடி: கடலாடி அருகே ஆப்பனுார் ஊராட்சியில் 2021 -22ல் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் செப்டிக் டேங்க் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளதால் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. கழிப்பறை வளாகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியை பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு என ஐந்து கழிப்பறை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
கடலாடி ஊராட்சி ஒன்றிய நிதியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், மத்திய சுகாதார திட்டம் சார்பில் ரூ.2 லட்சம், ஆப்பனுார் ஊராட்சி சார்பில் ரூ.2 லட்சம் என ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகும்.
ஆப்பனுாரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: ஆப்பனுார் கண்மாய்க்கரையில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும். தற்போது சிவராத்திரியை முன்னிட்டு வெளியூர்களில் வசிப்பவர்கள் ஆப்பனுார் வருகின்றனர்.
சுகாதார வளாகம் பயன்பாடில்லாததால் திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
நேற்று காலை பொது சுகாதார வளாகத்தில் பொதுமக்கள் ஆய்வு மேற்கொண்ட போது செப்டிக் டேங்க் எதுவும் அமைக்கப்படாமல் கழிப்பறை மட்டுமே அமைத்துள்ளனர். இதை கண்காணிக்க வேண்டிய ஒன்றிய பொறியாளர் கண்டும் காணாமலும் உள்ளார்.
இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே ஊராட்சி தனி அலுவலர் முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

