/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாட்டுப்படகில் 302 மீனவர்கள் மட்டும் பயணம்
/
நாட்டுப்படகில் 302 மீனவர்கள் மட்டும் பயணம்
ADDED : பிப் 22, 2024 03:06 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு விழா பயண ஏற்பாடுகள் ரத்தானது. நாட்டுப்படகில் கச்சத்தீவு விழாவுக்கு செல்ல அனுமதி வழங்குமாறு நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வரதராஜன், ராமநாதபுரம் மீன்துறை இணை இயக்குனர் பிரபாவதி முன்னிலையில் சமரசக் கூட்டம் நடந்தது. இதில், நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பி.ராயப்பன், சின்னத்தம்பி பங்கேற்றனர்.
இதில் 17 நாட்டுப்படகுகளில் 302 மீனவர்கள் பிப்.23 காலை 6:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
பயணம் ரத்து என பாதிரியார் அறிவிப்பு
இலங்கை நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட 4 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்.17 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றனர். மேலும் பிப்.23, 24ல் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் பங்கேற்க போவதில்லை. படகுகளை இயக்க மாட்டோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து விழாவில் பங்கேற்க போவதில்லை என கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு நேற்று கச்சத்தீவு சர்ச் விழா திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.