/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்கரையோரங்களில் செக்போஸ்ட் திறப்பு
/
கடற்கரையோரங்களில் செக்போஸ்ட் திறப்பு
ADDED : பிப் 26, 2024 12:55 AM
திருவாடானை : கடற்கரை ஓரங்களில் அமைக்கப்பட்ட செக்போஸ்ட்கள் மூடியிருப்பதால் கடத்தல் சம்பவங்களை தடுப்பதில் தொய்வு ஏற்பட்டது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மீண்டும் செக்போஸ்ட்கள் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சில மாதங்களாக தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்புவோரை எளிதாக பிடிக்கவும், பிற மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவோரை வாகன சோதனையில் அறிந்து கொள்ளவும் கடற்கரை ஓரங்களில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.
கடலோர காவல் குழும போலீசாரால் தீர்த்தாண்டதானம், வட்டாணம், வீரசங்கலிமடம், மணக்குடி, உப்பூர், தேவிபட்டினம், கோப்பேரிமடம், சாயல்குடி, திருப்புல்லாணி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.
இந்த செக்போஸ்ட்களில் பணியாற்றிய போலீசார் பல்வேறு பணிகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
பணிகள் முடிந்து பல நாட்களாகியும் செக்போஸ்ட்களில் பொறுப்பேற்க உத்தரவு வராததால் ராமநாதபுரத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனால் செக்போஸ்ட்களில் வாகன சோதனை இல்லாததால் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தது.
தொண்டி மக்கள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. குறிப்பாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அடிக்கடி தங்கம் கடத்தப்படுகிறது.
கடத்தல் காரர்கள் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே செக்போஸ்ட்களில் போலீசார் நியமித்து வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.
இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது செக்போஸ்ட்கள் திறக்கப்பட்டு வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

