ADDED : ஆக 08, 2025 10:18 PM

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அன்று முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் வந்து செல்கின்றன. இப்பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் திறந்ததும் கப்பல், மீன்பிடி படகுகள் கடந்து செல்கின்றன.
புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் துாக்கு பாலம் திறந்து மூடுவதில் இருமுறை சிக்கல் ஏற்பட்டது. கடைசியாக ஜூலை 12ல் திறந்து மூடிய போது மீண்டும் சிக்கலாகி 3 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண புதிய துாக்கு பாலத்தில் உள்ள கம்பிவடம், வீல்களில் பராமரிப்பு செய்யும் பணியில் ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணி ஆக.,14 வரை நடக்க உள்ளது. இதன் பிறகு துாக்கு பாலம் திறக்கப்பட்டு கப்பல், படகுகள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.