/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர் மின்தடையால் ஊராட்சிகளில் பாதிப்பு
/
தொடர் மின்தடையால் ஊராட்சிகளில் பாதிப்பு
ADDED : ஜன 28, 2025 05:11 AM
சாயல்குடி: சாயல்குடி துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் செய்யக்கூடிய ஏழு ஊராட்சிகளுக்கு முறையாக மின் சப்ளை இல்லாததால் கிராம மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகின்றனர்.
கன்னிராஜபுரம், நரிப்பையூர், செவல்பட்டி, முத்துராமலிங்கபுரம், எஸ்.தரைக்குடி, தர்மராஜபுரம், வெட்டுக்காடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி நிலவுகிறது.
இதனால் பள்ளி கல்லுாரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இரவில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் வேதனை அடைகின்றனர். கன்னிராஜபுரம் பகுதி கிராம மக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் அடிக்கடி தொடர் மின்தடை செய்யப்படுகிறது. அறிவிக்கப்படாத மின்தடையால் ஏராளமானோர் பாதிப்படைகின்றனர். சாயல்குடி துணை மின் நிலையத்தில் இருந்து பெருகிவரும் கிராமப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை கணக்கிட்டு கூடுதல் திறன் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சார உபகரண பொருட்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான ஊராட்சிகளில் உள்ள தனியார் மின் பணியாளர்கள் மின் டிரான்ஸ்பார்மரை நிறுத்தக்கூடிய கேண்டில் பார் வைத்துக் கொண்டு தற்காலிக மின்தடை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
எனவே சாயல்குடி துணை மின் நிலைய வாரிய அதிகாரிகள் மின் பற்றாக்குறையால் திணறும் பொதுமக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பலமுறை புகார் அளித்தாலும் கண்டும் கொள்வதில்லை என்றனர்.

