sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பல்லுயிர்களின் சொர்க்கம் மன்னார் வளைகுடா; இன்று சர்வதேச உயிர்க்கோள காப்பக தினம்

/

பல்லுயிர்களின் சொர்க்கம் மன்னார் வளைகுடா; இன்று சர்வதேச உயிர்க்கோள காப்பக தினம்

பல்லுயிர்களின் சொர்க்கம் மன்னார் வளைகுடா; இன்று சர்வதேச உயிர்க்கோள காப்பக தினம்

பல்லுயிர்களின் சொர்க்கம் மன்னார் வளைகுடா; இன்று சர்வதேச உயிர்க்கோள காப்பக தினம்


ADDED : நவ 03, 2024 04:24 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: உலகளவில் உள்ள கடல்களில் இந்திய பெருங்கடல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் கட்ச் வளைகுடா, காம்பட் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவை இந்திய பெருங்கடலில் உள்ள முக்கிய மூன்று வளைகுடாக்கள். இவற்றுள் மன்னார் வளைகுடா பல்லுயிரிய செழிப்பிடமாக விளங்குகிறது.

உலக உயிர்க்கோள காப்பக அமைப்பானது 2021ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோ பொது மாநாட்டில் நவ.3ம் தேதியை சர்வதேச உயிர்க்கோள காப்பக தினமாக கடைபிடிக்க முடிவு எடுத்தது.

மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவை மேம்படுத்தவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறிவியல் தளத்தைக் கொண்டு உலக உயிர்க்கோள காப்பக அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 12 உயிர்க்கோள காப்பகங்கள் உலக உயிர்க்கோள காப்பக வலை அமைப்பில் இடம்பெற்றுள்ளன. அதில் மன்னார் வளைகுடா முதல் கடல் சார் உயிர்க்கோள காப்பகமாக உள்ளது.

பல்லுயிர்களின் சொர்க்கம்


இப்புவியில் 8.7 மில்லியன் சிற்றினங்கள் பரவி உள்ளன. நில வாழ் உயிரினங்களில் 86 சதவீதமும், கடல் வாழ்வனவற்றில் 91 சதவீதமும் இன்னமும் கண்டுபிடித்து பட்டியல் படுத்த வேண்டியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. பல்வேறு வகைப்பட்ட சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழ்வதே பல்லுயிர் தன்மை எனப்படுகிறது.

அதை பேணுவதில் பவளப்பாறைகள் முக்கிய பங்கு வைக்கிறது. ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பரப்பை சர்வதேச ஐக்கிய கூட்டுறவு அமைப்பு 1986ல் கடல் சார் தேசிய பூங்காவாக அறிவித்தது.

இது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசிய பூங்காவாகும். 10,500 சதுர கி.மீ., பரப்பளவை உள்ளடக்கியது. இப்பகுதியில் பவளப்பாறை திட்டுகள் மணற்பங்கான கடற்கரைகள் சேர்த்து சமவெளிகள், உவர்நீர் பகுதிகள், சதுப்பு நில உப்பங்கழிகள், அலையாத்தி காடுகள், பாசிகள் நிறைந்த கடல் பகுதிகள் போன்ற பல்வேறு வகையான வாழிடங்களை கொண்டுள்ளது. மொத்தத்தில் கடல் சார் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்குகிறது.

பவளப்பாறைகள்


மன்னார் வளைகுடா பகுதிகளில் காணப்படும் பவளப்பாறைகள் கடலில் மலைக்காடுகள் எனவும் அழைக்கப்படுகிறது. இவைகள் ஆழம் குறைந்த கடலின் அடிப்பகுதியில் தொடங்கி கடல் மேல் மட்டம் வரை சுண்ணாம்பினால் (கால்சியம் கார்பனேட்) பாறைகளை உருவாக்கும் திறன் பெற்ற உயிரினங்கள்.

மேல் மட்டத்தில் உள்ளவை மட்டும் உயிருள்ளவையாகவும், அடியில் உள்ளவை உயிரற்ற பாறைகளாகவும் மாறிவிடுகிறது. உயிரின வகைப்பாட்டில் நிடேரியா தொகுதியைச் சார்ந்த பவளப்பாறைகள் அதன் வளர் மாற்றத்தில் பாலிப் என்ற நிலையில் கடல் நீரில் இருக்கும் கால்சியத்தை எடுத்துக்கொண்டு, வளர்ச்சியின் முடிவில் கார்பனேட்டை உருவாக்கி பாறைகளாக மாறி விடுகிறது.

கடினத் தன்மையும் உறுதியையும் கொண்ட இந்த பாறைகளை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். அதன் உறுதி தன்மைக்கு சாட்சியாக போஸ்ட் ஆபீஸ், சர்ச், ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்களாக சிதைவடையாமல் இன்னும் தனுஷ்கோடியில் எஞ்சி நிற்கிறது.

கடல் பாசிகள்


மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகளை போன்று கடல் பாசிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்டக்கோரை, பக்கோடா, மரிக்கொழுந்து, சர்க்காசம், ஸ்பைருலினா சுருள் பாசி, அகர் அகர் கிராஸிலேரியா போன்றவைகள் மருந்துக்காகவும், அழகு சாதனப்பொருள் தயாரிப்பிலும், செறிவுமிகு புரத உணவு மற்றும் கால்நடைக்கு தீவனங்களுக்காகவும் அறுவடை செய்யப்படுகின்றன.

கடல்பாசி வளர்ப்பு, சேகரிப்பு மீனவ பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வாழ்வாதாரம் உயர்வதற்கு வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையில் இரண்டரை லட்சம் பேர் கடல் தொழிலையே நம்பி உள்ளனர்.

மக்களின் உணவுத் தேவைக்காக மீன்பிடித் தொழிலை முக்கியமாக கொண்டு வாழ்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தாலும், தேவை அதிகரிப்பதாலும் மீன்பிடிக்கும் முறைகளில் மாற்றம், உற்பத்திக்கு மீறிய அறுவடை, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல், வெடிவைத்து மீன்பிடிப்பது போன்ற செயல்பாடுகளால் பவளப்பாறைகளும் பல்லுயிர் தன்மையும் பாதிப்படைகின்றன.

அழியும் தருவாயில் உள்ள ஆவுலியா மற்றும் டால்பின்கள் போன்றவைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மன்னார் வளைகுடா உயிர்க்கோளப் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டு முயற்சியாகும். இந்த முயற்சியில் மக்களின் பங்கு அவசியம். அது சார்ந்த மன்னர் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகமும் அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

தேசிய கடல் பூங்கா


மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவில் 21 தீவுகள் உள்ளன. இங்கு உள்ளூர் பங்களிப்புடன் குருசடை தீவு படகு பயணம், தருவைக்குளம் கண்ணாடி இழை படகு, சுற்றுலா மற்றும் காரங்காட்டில் சதுப்பு நில மாங்குரோவ் காடுகள் சுற்றுலா, ஏர்வாடியில் பவளப்பாறை சுற்றுலா போன்றவை மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் சிறப்பாக செய்து வருவதால் இத்திட்டத்தை பாராட்டி ஜப்பான் நாட்டின் சுற்றுலாத்துறை விருது வழங்கிய கவுரவித்திருக்கிறது.

கடற்பரப்பில் உள்ள உயிரிய பல்வகை தன்மையை பாதுகாத்தல், மேலாண்மை செய்தல், மேலும் தகுந்த முறையில் பயன்படுத்தினால் மட்டுமே இயற்கை கொடுத்த கடல்வளக் கொடையை அடுத்த தலைமுறைக்கு நாம் பத்திரப்படுத்தி வைக்க முடியும்.

-------------------------------செ.மணிவண்ணன்

உயிரியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,

தினைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம்.






      Dinamalar
      Follow us