/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரேக் டவுன் ஆகிய இரண்டு அரசு பஸ்கள் பயணிகள் அவதி
/
பிரேக் டவுன் ஆகிய இரண்டு அரசு பஸ்கள் பயணிகள் அவதி
ADDED : பிப் 04, 2024 05:43 AM

சாயல்குடி : -சாயல்குடி அருகே ஒப்பிலானில் ஒரே நேரத்தில் ஒரு அரசு டவுன் பஸ், புறநகர் பஸ் பிரேக் டவுன் ஆனதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சாயல்குடி அருகே நேற்று மாலை 5:45 மணிக்கு டி.என்:63-- 1262 என்ற அரசு டவுன் பஸ் முதுகுளத்துார் பணிமனையில் இருந்து சாயல்குடி வழியாக முந்தல் கிராமத்திற்கு பயணிகளை இறக்கி விடுவதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒப்பிலான் பஸ் நிறுத்தம் அருகே டீசல் இல்லாமல் டவுன் பஸ் நின்றது.
இதனால் பஸ்சில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் முந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்காக ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். அதே நேரத்தில் மாலை 6:10 மணிக்கு அருப்புக்கோட்டை பணிமனையிலிருந்து புறநகர் பஸ் சாயல்குடி வழியாக வாலிநோக்கம் சென்றது.
பஸ்சில் கூட்ட நெரிசலுடன் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒப்பிலான் வரும் வழியில் ஏற்கனவே நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் அருகே சிறிது தொலைவில் பிரேக் டவுன் ஆகி நின்றது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
ஒப்பிலான் எம்.ஆர்.பட்டினம் பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:
அரசு டவுன் பஸ் டீசல் இல்லாமல் நின்றது பயணிகள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியது.
உரிய முறையில் டவுன் பஸ்சில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதா என சரிபார்த்து ஓட்டுவது கடமையாகும். இதனால் பொதுமக்களை பாதியில் இறக்கி விடுவது நியாயம் இல்லை.
அதேபோல அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி வழியாக வாலிநோக்கம் சென்ற பஸ் பிரேக் டவுன் ஆகி வழியில் நின்றது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு பழுது சரிபார்க்கப்பட்டு புறப்பட்டு சென்றது.
எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் கிராம மக்களின் நலனுக்காக உரிய முறையில் ஓட்டை உடைசலான பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.