ADDED : அக் 04, 2024 04:31 AM
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குகுளிர் சாதன வசதி கொண்ட அறை, தனியாக வார்டுகள் அமைத்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
பழைய கட்டடத்தில் இந்த வார்டு செயல்பட்ட நிலையில் கட்டடம் மோசமாக சேதமடைந்ததால் காப்பீட்டு திட்ட வார்டு முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளது. காலி செய்யப்பட்ட வார்டை புதிய கட்டடத்தில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அங்கு காப்பீட்டு திட்ட அலுவலகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முதல்வர் காப்பீட்டு திட்ட அலுவலர்கள் கூறியதாவது:
பழைய கட்டடத்தில் செயல்பட்ட வார்டில் கதவுகள் சேதமடைந்து விட்டதால் குளிர் சாதனங்களை இயக்க முடியவில்லை. கட்டடத்திலும் சேதம் ஏற்பட்டதால் காலி செய்யப்பட்டது.
தற்போது காப்பீட்டு திட்டத்தில் பயன் பெறும் நோயாளிகள் பொது வார்டுகளில் மற்ற நோயாளிகள் போல் அனுமதிக்கப்படுகின்றனர்.
பழைய கட்டடத்தை பொதுப்பணித்துறையினர் சீரமைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பணிகள் நிறைவு பெற 3 மாதங்கள் வரை ஆகலாம்.
அது வரை காப்பீட்டு திட்ட நோயாளிகள் பொது நோயாளிகளைப் போல் பொது வார்டுகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
பொது வார்டில் அனுமதிக்கப்படும் அவர்களுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் கட்டணம் எப்படி பெற முடியும். புதிய கட்டடத்தில் முதல்வர் காப்பீட்டு திட்ட வார்டை துவங்கி நோயாளிகளுக்கு உள்ள சலுகைகளை வழங்க அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் முன் வர வேண்டும்.
