ADDED : செப் 11, 2025 11:28 PM

கூடலுார்:''பெரியாறு அணையில் நீர்க்கசிவு சரியான அளவிலேயே உள்ளதால் அணை பலமாகவே உள்ளது ''என அணையை ஆய்வு செய்த மத்திய அணை பாதுகாப்பு ஆணைய இயக்குனர் கிரிதர் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை 2024 அக். 1 முதல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இதனால் ஏற்கனவே இருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணைக் குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டு புதியதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயின் தலைமையிலான ஏழு பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ஆண்டிற்கு ஒரு முறை அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும். இக்குழுவிற்கு துணையாக அணை பாதுகாப்பு ஆணைய மண்டல இயக்குனர் கிரிதர் தலைமையில் புதிய துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வீன், செயற்பொறியாளர் செல்வம், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு, உதவி செயற்பொறியாளர் சிஜி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். துணைக் குழு இரண்டாவது முறையாக நேற்று அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு நடத்தியது.
அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக இருந்த நிலையில் (மொத்த உயரம் 152 அடி) மெயின் அணை, பேபி அணை, ஷட்டர், நீர்க்கசிவு காலரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அணையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் இதுவரை நடந்த பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் 2,7,8 ஆகிய மூன்று ஷட்டர்களை இயக்கிப் பார்க்கப்பட்டது.
அணைப்பகுதியில் பொருத்தப்பட்ட நிலநடுக்க கருவி (சீஸ்மோகிராப்), நிலஅதிர்வுக் கருவி (ஆக்சிலரோகிராப்) ஆகியவற்றை பார்வையிட்டு அதன் இயக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், மகேந்திரன், முகமது உவைஸ், பாலசேகரன் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
மாலையில் குமுளி 1ம் மைலில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் இக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதற்கான ஆய்வு அறிக்கையை மத்திய கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பி வைக்கும்.