ADDED : ஜன 19, 2025 04:50 AM

தேவிபட்டினம்: உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல் மழையில் நனையாத வகையில் பிளாஸ்டிக் தார்பாய் மூலம் மூடப்பட்டு தொழிலாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
கிழக்குக் கடற்கரை பகுதிகளான தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, கோப்பேரி மடம், நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உப்பள பாத்திகள் மூலம் உப்பு உற்பத்தி செய்கின்றனர்.
இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவு பொருட்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தரம் உப்பு கருவாடு, தோல் பதனிடுதல் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சீதோஷ்ண நிலை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உப்பளத்தில் விற்பனையாகாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள உப்பு மழையில் நனையாத வகையில் பிளாஸ்டிக் தார்பாய் மூலம் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உப்பள பகுதியில் ஆங்காங்கே மூடி பாதுகாக்கப்பட்டு வரும் உப்பு குவியல்கள் சிறிய குன்றுகள் போல் உள்ளது.