/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணிகள் பரிதவிப்பு: இரவு நேரத்தில் நகருக்குள் பஸ் வசதியில்லை: ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூல்
/
பயணிகள் பரிதவிப்பு: இரவு நேரத்தில் நகருக்குள் பஸ் வசதியில்லை: ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூல்
பயணிகள் பரிதவிப்பு: இரவு நேரத்தில் நகருக்குள் பஸ் வசதியில்லை: ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூல்
பயணிகள் பரிதவிப்பு: இரவு நேரத்தில் நகருக்குள் பஸ் வசதியில்லை: ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூல்
ADDED : ஜன 23, 2025 04:11 AM
ராமநாதபுரம்: மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 9:00 மணிக்கு மேல் உள்ளூர் பகுதிகளுக்கு செல்வதற்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அதன்பிறகு வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் தங்கள் வீடுகளுக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதனை பயன்படுத்தி ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்களுக்கும், மாவட்டத்திற்குள்ளும் 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.
ராமநாதபுரம் டவுன், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு 9:00 மணி வரை மட்டுமே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன் பிறகு நிறுத்தி விடுகின்றனர். இதனால் ரயில்கள் மற்றும் வெளியூர் பஸ்களில் வரும் பயணிகள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதனை பயன்படுத்தி சில ஆட்டோ, டாக்சிகளில் 2 முதல் 4 கி.மீ., துாரத்திற்கு கூட ரூ.150 முதல் ரூ.250 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் குடும்பத்தினருடன் இரவில் பயணம் மேற்கொள்ளும் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
சுற்றுவட்ட பஸ் இயக்க வேண்டும்
இரவு நேரத்தில் வசூல் குறைவு என்ற காரணத்தினால் அரசு டவுன் பஸ்கள் இயக்குவது இல்லை என போக்குவரத்து அதிகாரிகள் காரணம் சொல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பாரதிநகர், பட்டணம்காத்தான், செக்போஸ்ட், இ.சி.ஆர்.,ரோடு, தேவிபட்டினம் ரவுண்டானா, சூரன்கோட்டை, கேணிக்கரை, அரண்மனை, அரசு மருத்துவமனை அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை சுற்றுவட்ட பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
இந்த பஸ்களை அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற அளவில் இரவு முழுவதும் இயக்க வேண்டும். இதனால் பயணிகள் படும் அவதி குறையும். வெளியூர் பயணி ஒருவர் கூறுகையில், திருச்செந்துாரில் இருந்து ரூ.140 கட்டணத்தில் ராமநாதபுரம் வந்து விட்டேன். பஸ்ஸ்டாண்டில் இருந்து பட்டணம்காத்தான் பழைய செக்போஸ்ட் செல்ல இரவு 12:00 மணிக்கு மேல் ஆட்டோவில் செல்ல ரூ.250 கட்டணம் கேட்டால் என்ன நியாயம் என்றார்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி இரவு நேரம் சுற்றுவட்ட பஸ் போக்குவரத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.