ADDED : மே 28, 2025 02:35 AM
ராமநாதபுரம்:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வழங்கப்படாததால் மறுகூட்டல், மறுமதிப்பீடு தாமதம் ஏற்படுவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 ல் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையப் பொறுப்பாளர்கள் வாயிலாகவும் மே 17 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். நடப்பாண்டு முதல் நேரடியாக மறுகூட்டல் விண்ணப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற்ற பின் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தாமதத்தால் தவிப்பு
வழக்கமாக பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டால் விண்ணப்பித்த ஒருவாரத்திற்குள் கிடைத்துவிடும். இந்தாண்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க காலதாமதம் ஆவதாகவும், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இதில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் ' பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் பள்ளிகள் வாரியாக சென்னைக்கு சென்று அங்கிருந்து ஆன்-லைனில் சம்பந்தப்பட்ட விடைத்தாள் உள்ள மாவட்ட மையங்களுக்கு அனுப்பிவைத்து விடைத்தாள் நகல் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அதிக மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பம் செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது.இம்மாதத்திற்குள் விடைத்தாள் நகல் வந்து விடும். ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றனர்.