ADDED : செப் 19, 2026 02:09 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரபாகரன், ஏட்டு முரளிதரனை கத்தியால் குத்த முயன்றார்.
பிரபாகரனுக்கு முரளிதரனுடன் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பிரபாகரன் கத்தியுடன் உச்சிப்புளி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.
வெளியே நின்றபடி உள்ளே இருந்த ஏட்டு முரளிதரனை வெளியே வருமாறு சவால் விடுத்தார். முரளிதரனும் பிரபாகரனை உள்ளே வருமாறு கூறினார். அப்போது வெளியே வந்த எஸ்.ஐ., கலைமுருகன், ஏட்டு மலைச்சாமி தலையிட்டு பிரபாகரனை அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது ராமேஸ்வரம் டி.எஸ்.பி., திருப்பதி வெளியே வந்த போது பிரபாகரன் மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியை வெளியே எடுத்து முரளிதரனை கொல்லாமல் விடமாட்டேன் என ஸ்டேஷன் உள்ளே செல்ல முயன்றார்.
அங்கிருந்த போலீசார் பிரபாகரனிடம் கத்தியை பறித்து வெளியே அழைத்துச் சென்றனர்.
மேலும் பிரபாகரன் மது அருந்தியிருந்தாரா என கண்டறிய போலீஸ் வாகனத்தில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசாரை கடிக்க முயன்று வாகனத்தில் இருந்து கீழே குதித்து தப்பினார். பிரபாகரன் மீது கொலை முயற்சி வழக்கு, பொது இடத்தில் அசிங்கமாக பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதச் சட்டப்பிரிவுகளின் கீழ் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிந்தனர்.
